0
Image result for பஞ்சாங்கம் என்றால் என்ன
பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். அவையாவன :
(1) வாரம் (2) நட்சத்திரம் (3) திதி (4) யோகம் (5) கரணம்


இனி இவைகளைப் பற்றி விளக்கமாக காண்போம்.

(1) வாரம் : என்பது ஞாயிறு முதல் சனி வரையான கிழமைகள் 7 ஐக் குறிக்கும்.

(2) நட்சத்திரம் : என்பது அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்கள்.

(3) திதி : என்பது ஒரு வானியல் கணக்கீடாகும். அதாவது, வானில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவாகும்.

(4) யோகம்: வானில் ஒரு குறித்த இடத்திலிருந்து சூரியனும், சந்திரனும் செல்லுகிற மொத்த தொலைவாகும்.

(5) கரணம்: என்பது திதியில் பாதியாகும்.





பஞ்சாங்கத்தை பயன்படுத்துவது எப்படி?


உதாரணத்திற்கு பஞ்சாங்கத்தில் கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டிருந்தால், அதனை எப்படி புரிந்து கொள்வது என பார்க்கலாம். 3 ஏப்ரல் 2011 அன்றைய பஞ்சாங்க விவரத்தை வாசன் பஞ்சாங்கத்தில் இருந்து எடுத்து தருகிறோம். (நன்றி: வாசன் புக் ஹவுஸ்)


ஆங்கிலம்
தமிழ்
கிழ
திதி
(நா,வி)
நட்சத்திரம்
(நா,வி)
யோகம்
(நா,வி)
கரணம்
(நா,வி)
ஏப் 3
பங் 20
ஞா
அமா
34 44
உத்ரட்டாதி
20 33
பிராம்யம்
8 32
சதுஷ்பாதம்
1 40
முதல் நிரலில் (அதாம்பா first column) வருவது ஆங்கில தேதி, 2 வது நிரலில் வருவது அதற்கு இணையான தமிழ் தேதி, 3 வது நிரலில் வருவது அன்றைய கிழமை (ஞாயிறு), 4 வது நிரலில் வருவது அன்றைய திதி அமாவாசை (அன்றைய சூரிய உதயத்தில் இருந்து எவ்வளவு நாழிகை இருக்கும்), அடுத்து வருவது நட்சத்திரம், யோகம், கரணம் போன்றவைகளும் அன்றைய சூரிய உதயத்தில் இருந்து எவ்வளவு நாழிகை இருக்கும் என்ற விவரங்களை நமக்கு மிகவும் எளிமையாகத் தருகிறது. அன்றைய தினத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாழிகைக்கு பிறகு அடுத்தது தொடங்கும் என்று பொருள். அதாவது, நட்சத்திரத்தை எடுத்துக் கொண்டால், உத்திரட்டாதி 34-44 நாழிகைக்கு பிறகு, அடுத்த நட்சத்திரமான ரேவதி தொடங்கும் என்று பொருள். இப்படியே திதி, யோகம், கரணம் போன்றவைகளையும் கண்டு கொள்ள வேண்டும்.

இடத்தை மிச்சப் படுத்துவதற்காக சுருக்கமாக கொடுத்திருப்பார்கள். அஸ்வினி என்பதற்கு பதில் அஸ் என்று கொடுத்திருப்பார்கள். அமாவாசை என்பதற்கு பதிலாக அமா என்றும் கொடுத்திருப்பார்கள். இதன் விரிவை புதியவர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, பஞ்சாங்கத்தில் ஏதேனும் ஒரு பக்கத்தில் கொடுத்து இருப்பார்கள். வாசன் பஞ்சாங்கத்தில், 79ஆம் பக்கத்தில் கொடுத்து இருக்கிறார்கள்.

முக்கியக் குறிப்புகள் :

(அ) ஜோதிட ரீதியாக ஒரு நாளின் தொடக்கம் என்பது அன்றைய தினத்தின் சூரிய உதய நேரமேயாகும்.

(ஆ) பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் யாவும் அன்றைய சூரிய உதய நேரத்தில் இருக்கும் ஆகாயக் காட்சியாகும்.

(இ) பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள கால அளவு (நாழிகை, வினாடி அல்லது மணி, நிமிஷம்) அன்றைய சூரிய உதயத்திலிருந்து கணக்கிடப்படுகிறது.

(ஈ) மிக முக்கிய குறிப்பு என்னவெனில், மணி, நிமிஷம் என்பது நள்ளிரவு 00.00 வில் தொடங்குகிறது. ஆனால், நாழிகைகள் அன்றைய காலை சூரிய உதயத்தில்தான் தொடங்குகிறது. சூரிய உதயம் ஆண்டு முழுமைக்கும், எல்லா நாட்களுக்கும் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும்.

பெரும்பாலான பஞ்சாங்கங்கள் மணி, நிமிஷ அளவுகளிலேயே, இப்பொழுது கிடைக்கிறது. இருப்பினும், தெரிந்து கொள்ளுங்கள் 1 நாழிகை = 24 நிமிஷங்கள் ஆகும். மேற்கொண்டு உங்களுக்கு கூடுதல் தகவல் தேவைப்பட்டால், எம்மை தொடர்பு கொள்ளவும்.

பஞ்சாங்க விளக்கம்:

பஞ்ச அங்கங்களைப் (ஐந்து-அங்கங்களைப்) பற்றிய விபரங்களை கூறுவது பங்சாங்கம். ஐந்து அங்கங்களாவன:

1. திதி,  2.வாரம்,  3.நக்ஷ்த்திரம்,  4.யோகம்,  5.கரணம் என்பனவாம்.

தற்பொழுது இரு வகையான பஞ்சாங்கங்கள் பாவனையில் உள்ளன.
ஒன்று "திருகணித பஞ்சாங்கம்", மற்றது "வாக்கிய பஞ்சாங்கம்".

கி.மு. 1200 முதல் கி.மு.400 முடிய உள்ள காலத்தில் 18 விதமான சித்தாந்தங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த 18 வகையான சித்தாந்தங்களை ஆதாரமாக வைத்தே பஞ்சாங்கங்கள் கணிக்கப்பெற்றன.

கிரகங்களின் வேகம், ராசிகளில் தங்கும் காலம் இவற்றை எல்லாம் கணிப்பதற்கு ஒரு முறையைக் கண்டு பிடித்தனர். இது வாக்கிய முறை எனப்பட்டது. இன்றும் இந்த முறையில் பஞ்சாங்கங்கள் வெளி வருகின்றன. இந்தப் பஞ்சாங்கங்கள் "வாக்கிய பஞ்சங்கம்" எனப்படும்.

காலப்போக்கில் வாக்கியப் பஞ்சாங்கங்கக் கணித முறையில் சில பிழைகளைக் கண்டறிந்தனர். அதனால் அவைகளை திருத்திப் புதிய முறையில் கணித்துக் கொண்டனர். திருத்திய திருகணித முறையை ஒட்டிய பஞ்சாங்கங்கள் "திருகணித பஞ்சாங்கம்" எனப்படும்.

இந்த 20-ம் நூற்றாண்டில் கிரகங்களை ஆராச்சி செய்து அறிவதற்கு பல தொழில் நுட்ப உபகரணங்கள் உள்ளன. அவைகள் மூலம் நுட்பமாக கிரகங்களின் வேகம், அவற்றின் நிலைகளைக் கண்டறியக் கூடியதாக உள்ளது. தற்போதுள்ள வான வியல் முறையும், திருகணித-பஞ்சாங்க முறையும் எந்த வித மாறுதலும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருக்கிறது. அதனால் திருகணித முறை தான் சரியான முறை என முடிவுக்கு வந்துள்ளார்கள். ஆனாலும் சிலர் வாக்கிய முறைதான் பழமையானது என்று பாவிப்பாரும் உளர்.

திதி: அமாவாசை தினத்தில் (அமாந்தத்தில்) சந்திரன்; சூரியனோடும், பூமியோடும் தக்ஷ்ணோத்தர ரேகையில் சமமாக ("0" டிகிரியில்) நின்ற பின் பூமியைச் கிழக்கு நோக்கி சுற்றும் போது சூரியனை பிரிகின்றது. இவ்வாறு சூரியனப் பிரியும் ஒவ்வொரு 12 பாகைகள் கொண்ட 30 பிரிவுகளும் திதிகள் எனப்படும்.

விளக்கமாக கூறுவதாயின்; சூரியன் - சந்திரன் - பூமி ஆகியவற்றிக் இடையில் ஏற்படும் கோண அளவைக் குறிப்பனவாகும். அவை பூர்வபக்க பிரதமை முதல் அமாவாசை வரையான 30 திதிகளாகும்.  அமாவாசையில் இருந்து பூரணை வரையான (பூர்வ பக்க பிரதமை முதல் பூரணை வரைன காலத்தில் வரும்) 15 திதிகளும் சுக்கில பட்சத் திதிகள் எனவும்; தேய் பிறை காலத்தில் அபரபக்க பிரதமை தொடக்கம் அமாவாசை வரை வரும் 15 திதிகளும் கிருஷ்ண பட்சத் திதிகள் எனவும் அழைக்கப்படும்


சந்திரன் தினமும் சுமார் 12 டிகிரி சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருப்பார். 15 ஆவது தினமான பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180 டிகிரி தூரத்தில் இருப்பார். அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது. அதாவது இராசிச் சக்கரத்தில் சூரியனில் இருந்து 7-வது ராசியில் சஞ்சரிப்பார்.

அம்மாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12 டிகிரி விலகி இருப்பார்.அன்று முதல் திதியாகிய "பிரதமையும்". மறு நாள் இன்னும் ஒரு 12டிகிரி விலகியிருப்பார். அன்று இரண்டாவது திதியாகிய துதியையும், இப்படியே தொடர்ந்து 3. திருதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி. 13. திரயோதசி, 14. சதுர்தசியும், 15-ம் நாள் பெர்ணமித் திதியும் ஏற்படுகின்றது. சந்திரன் அம்மாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் என்று அழைக்கப்பெறுகின்றன. இந்த 15 நாட்களையும் சுக்கிலபக்ஷ் திதிகள் என்பார்கள்.

அதே போல் பௌர்ணமி திதியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாக தேய்கிறார். அவற்றிற்கும் முறையே அந்த 15 திதிகளின் பெயர்களே குறிப்பிடப்படும். ஆனால் தேய்பிறையாக உள்ளதால் (தேய்-பிறைத் திதிகள்) கிருஷ்ணபக்ஷ் திதிகள் எனக் கூறுவார்கள். .

புத்தி சுவாதீன முற்றோர்; அமாவாசை, பூரணை, அட்டமி போன்ற திதிகளில் (கனத்த நாட்களில்) மிகவும் கடுமையாக (வேகமாக) உள்ளவர்களாக காணப்படுவது கிரகங்கள் புவியில் உள்ள உயிகள் மீது தாக்கத்தினை உண்டு பண்ணுகின்றன என்பதற்கு மற்றுமோர் உதாரணமாகும்.

வாரம்:
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிழமைகள் வாரம் எனப்படும். இவை கிரகங்களின் பெயர்களில் அமைந்துள்ளமை கவனிக்கத்தக்கது. (ராகு, கேது கிரகங்களிற்கு சொந்த கிழமையும் இல்லை, சொந்த வீடும் இல்லை).

நட்ஷத்திரம்:                                                                                                                      
சந்திரன் இராசி மண்டல வலயத்தை சுற்றி வரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் எந்த நட்சத்திரத்தின் மேல் நகர்கின்றதோ அப் பிரிவுக்குரிய நட்சத்திரம் அந்த நேரத்திற்குரிய நட்சத்திரமாக கொள்ளப்படுகின்றது.

கரணம்:
கரணம் என்பது திதியில் பாதியாகும். அதாவது 6-டிகிரி கொண்டது ஒரு கரணம் ஆகும். கரணங்கள் மொத்தம் 11-ஆகும். அவையாவன:1. பவ,  2. பாலவ,  3. கெலவ,  4. தைதூலை,  5. கரசை,  6. வணிசை,  7. பத்தரை,  8. சகுனி,  9. சதுஷ்பாதம்,   10.  நாகவம்,  11. கிம்ஸ்துக்னம்.

இன்றைக்கு என்ன திதி என்று பஞ்சாங்கத்தில் கொடுத்து இருப்பார்கள். அதை எப்படிக் கணக்கிடுவது, அதன் உபயோகம் என்ன என்பது பற்றியும் அறிய வேண்டிய காலம் வரும் போது எழுதுகிறோம்.

யோகம்:
இரு வகையான யோகங்கள் பஞ்சாங்கத்தில் குறிக்கப்படுகின்றன. முதலாவது சூரியனும், சந்திரனும் சம்பந்தப்பட்டது. அதாவது வானமண்டலதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள மொத்த தூரம் ஆகும். இன்னும் சற்று விளக்கமாகக் கூறப்போனால் சூரியன், சந்திரனின் ஸ்புடங்களையும் கூட்டினால் வருவதே இந்த யோகம் ஆகும். இந்த யோகங்கள் மொத்தம் 27-ஆகும். இதனை " நாம யோகம்" என்பார்கள். அவையாவன:

1.விஷ்கம்பம்,   2.ப்ரீதி,   3.ஆயுஷ்மான்,  4.சௌபாக்யம்,   5.சோபனம்,  6.அதிகண்டம்,  7. சுகர்மம்,   8. திருதி, 9.சூலம்,  10.கண்டம்,  11.விருதி, 12.துருவம், 13. வியாகாதம்,  4. ஹர்ஷணம், 15. வஜ்ரம், 16. சித்தி, 17.வியதிபாதம், 18. வரீயான்,  19.பரீகம்,  20. சிவம், 21. சித்தம்,  22. சாத்தீயம், 23. சுபம்,  24.சுப்ரம், 25.பிராம்யம்,  26.ஐந்திரம்,  27. வைதிருதி.

மற்ற யோகம் சுபாசுப யோகம்; சித்த யோகமும் அமிர்த யோகமும் சுபகருமங்களுக்கு உரிய சுப யோகங்களாகும். மரண யோகம், நாச யோகம், உற்பாத யோகம், பிரபலா நிஷ்ட யோகம், திரிபுஷ்கர யோகம் எனபன சுப கருமங்களுக்கு விலக்கப்படும் அசுப யோகங்களாகும்.

நக்ஷ்த்திராத்தையும், கிழமையையும் வைத்தும் யோகம் கணக்கிடப்படுகிறது. இன்ன இன்ன கிழமைகளில் இந்த இந்த நக்ஷ்த்திரங்கள் வந்தால் இன்ன யோகம் என வகுத்து அதன்படி கணக்கிடப்படுகிறது.

உதாரணமாக திங்கள் கிழமை அன்று அஸ்வனி, பரணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம் பூரம், உத்திரம், ஹஸ்தம், அனுஷம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 15 நக்ஷ்த்திரங்கள் வருமேயாகில் அன்று சித்தயோகம் வரும்.

ரோகிணி மிருகசீரிஷம், புனர்பூசம், ஸ்வாதி, திருவோணம் ஆகிய 5 நக்ஷ்த்திரங்கள் வந்தால் அமிர்த யோகம் வரும்.

சோதிட காலவாய்பாடு


60 தற்பரை =  1 வினாடி

60 வினாடி =  1  நாளிகை
60 நாளிகை =  1  நாள்
365 நாள் + 15 நாளிகை + 31 விநாடி + 15 தற்பரை = 1 சௌர வருஷம்

60 வினாடி =  1 நாழிகை
60 நாழிகை =  1 நாள்
2 1/2 நாழிகை =  1 மணி
2 1/2 வினாடி =  1 நிமிஷம்

ஒரு நாள் :  60 நாழிகை (24 மணி)
ஒரு நாழிகை :  60 விநாழிகை
ஒரு விநாழிகை :60 லிப்தம்
ஒரு லிப்தம் :  60 விலிப்தம்
ஒரு விலிப்தம் :  60 பரா
ஒரு பரா :  60 தத்பரா

ஜோதிட விளக்கம்:

பஞ்சாங்க குறிப்பு:

சௌர வருஷம்:  சூரியன் மேடராசியின் ஆரம்ப நட்சத்திரத்திரமான அஸ்வினியில் பிரவேசிக்கும் காலம் முதல் மீனராசியின் கடைசி நட்சத்திரமான ரேவதியை விட்டு நீங்கும் காலத்தைக் குறிக்கும் (Sidereal revolution of Earth round the Sun). இக்காலப்பகுதி; சராசரியாக 365 நாள், 15 நாடி, 23 வினாடிகளைக் கொண்டதாகும்.

சாயன வருஷம்: சூரியன் மேஷாயன விஷூவத்தில் பிரவேசித்து திரும்ப மேஷாயன விஷூவத்தை வந்தடையும் காலத்தைக் குறிப்பதாகும் Tropical revolution of Earth round the Sun. இக் காலப்பகுதி; 365 நாள், 14 நாடி, 32 வினாடிகளைக் கொண்டதாகும்.

சாந்திர வருஷம்:  சௌரவருஷப்பிறபிற்கு முன் அதனை அடுத்து ஆரம்பிக்கும் பூர்வபக்கப் பிரதமை முதல் அடுத்த சௌர வருஷப்பிறபுக்கு முன் நிகழும் அமாவாசை முடியவுள்ள காலத்தைக் குறிப்பது. இக் காலப் பகுதி சுமார் 354 நாட்கள் கொண்டது.

சௌர மாதங்கள்:  மேடம் முதல் மீனம் ஈறாகவுள்ள பன்னிரண்டு ராசிகளிலும் சூரியன் சஞ்சரிக்கும் சித்திரை முதல் பங்குனி வரையான 12 காலப் பிரிவுகளாகும். பகல் மானத்துள் சங்கிராந்தி நிகழ்ந்தால் அன்றும்; இரவு நிகழுமாயின் மறுநாளும் மாதப்பிறப்பாக கொள்ளப்படும்.

சாந்திர மாதங்கள்:  பூர்வப்க்க பிரதமை தொடக்கம் அமாவாசைமுடியும்வரை உள்ள சைத்திரம் முதல் பாற்குண்ம் வரையான 12 காலப் பிரிவுகளாகும். மூன்று சௌர வருஷத்தில் 37 சாந்திர மாதங்கள் நிகழும். அதனால் சௌரமானத்துடன் சாந்திரமானம் இணங்கிச் செல்லும் பொருட்டு ஓர் சௌரமாதத்தில் இரண்டு அமாவாசை நிகழ இடையில் வரும் சாந்திரமாதம் "அதிகமாதம்" என் நீக்கப்படும்.

தமிழ் தேதி: சூரிய உதயம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரையும் உள்ள காலமாகும்.

ஆங்கிலத் தேதி: இரவு 12 மணி தொடக்கம் மறுநாள் இரவு 12 மணி வரையும் உள்ள 24 மணித்தியாலங்களைக் குறிக்கும்.

இஸ்லாமிய தேதி:  சூரிய அஸ்தமனம் முதல் மறுநாள் சூரிய அஸ்தமனம் வரை உள்ள காலப் பகுதியாகும்.

"அவமா" : ஒரு தினத்தில் மூன்று திதிகள் சம்பந்தப்பட்டால் அன்று "அவமா" அழைக்கப்படும்.

திரிதினஸ்புருக்: ஒரு திதி மூன்று நாட்கள் சம்பந்தப்பட்டு இருந்தால் அது "திரிதினஸ்புருக்" என்று அழைக்கப்படும்.

இராசிகள்-12:
1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம்,
4. கர்க்கடகம், 5. சிம்மம், 6. கன்னி,
7. துலாம்,  8. விருச்சிகம், 9. தனுசு,
10. மகரம், 11. கும்பம்,  12. மீனம் என்பன.

வான் வெளியில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ள போதும்; அவற்றுள் சிலவே பூமியின் Zodiac எனப்படும் இராசி மண்டல வலயத்தில் (சுற்றுப்பாதைக்குள்) அமைந்து பூமியில் விழைவுகளை உண்டுபண்ண கூடியனவாக உள்ளன. இவ் ராசி மண்டல வலயத்தினுள் 27 நட்சத்திர கூட்டங்கள் அமைந்துள்ளதாக கணிக்கப்பெற்றுள்ளன. இந்த 27 நட்சத்திரங்களும் ஒவ்வொன்றும் (3.33 பாகை) 3 பாகை 20 கலைகள் கொண்ட நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ராசியும் ஒன்பது நட்சத்திர பாதங்களை (2 1/4 நட்சத்திரங்களை) கொண்டனவாக அமைந்துள்ளது.

நட்சத்திரங்கள் - 27:
1. அஸ்வினி, 2. பரணி, 3. கார்த்திகை,
4. ரோகினி, 5. மிருகசீரிஷம், 6. திருவாதரை,
7. புனர்ப்பூசம், 8. பூசம், 9. ஆயில்யம்,
10. மகம், 11. பூரம், 12. உத்திரம்,
13. ஹஸ்தம், 14. சித்திரை, 15. ஸ்வாதி,
16. விசாகம், 17. அனுஷம், 18. கேட்டை,
19. மூலம், 20. பூராடம், 21. உத்திராடம்,
22. திருவோணம், 23. அவிட்டம், 24. சதயம்,
25. பூரட்டாதி, 26. உத்திரட்டாதி, 27. ரேவதி என்பனவாம்.


நட்சத்திரங்களும் ராசிகளும்:

சோதிட கணிப்பின் படி;  பூமியில் பட்டிபோல் சுற்றியுள்ள (கற்பனையான) இராசி மண்டல வலயம்; பூமி சூரியனைச் சுற்றும் போது இராசி மண்டல வலயத்தில் உள்ள ஏதோ ஒரு ராசியில் சூரியன் சஞ்சரிப்பார். சூரியனைப் போன்றே எல்லாக்கிரகங்களும் ஏதாவது ஒரு ராசியில், அந்தந்த ராசியில் உள்ள நட்சத்திரத்தின் மேல் சஞ்சாரம் செய்கின்றன. சந்திரன் ஒரு குறிப்பிட்ட தினத்தில் குறிக்கப்பட்ட நேரத்தில் எந்த நட்சத்திரத்தின் எந்த பாதத்தில் சஞ்சரிக்கிறாரோ அதுவே அப்போதய நட்சத்திரமும் அதன் பாதமும் என சோதிடம் கூறுகின்றது.

சூரியன் சித்திரை மாதத்தில் மேஷ-ராசியிலும், வைகாசி மாதத்தில் ரிஷப-ராசியிலும் சஞ்சரிக்கிறார். இப்படியே ஒவ்வொரு தமிழ் மாதமும் அடுத்துள்ள ஒவ்வொரு ராசியில் சஞ்சரித்து, தொடர்ந்து 12 ராசிகளிலும் சஞ்சரிக்கிறார். ஜோதிட கணிப்பின் படி சூரியன் தனது சுற்றை மேஷராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் ஆரம்பித்து மீனராசியில் உள்ள ரேவதி நட்சத்திரத்தை கடந்து செல்ல (12-ராசிகளையும் சுற்றிவர) 365.25 நாட்கள் எடுக்கின்றது.

Zodiac எனப்படும் இராசி மண்டல வலயம் நீள் வட்டத்தின் அமைப்பை கொண்டதனால் ஒருவருடைய ஜாதக-குறிப்பு கணிக்கும் போது நீள்வட்டமாக வரைதல் வழக்கமாக இருந்து வந்துள்ளது. காலப்போக்கில் இவ் வழக்கம் திரிபுற்று தற்போது நீள் சதுரமாக வரையப்படுகிறது.  ஜாதக-குறிப்பு என்பது சிசு பிறந்த தற்பரையில் பேரண்டத்தின் கோசர (கிரக) நிலையையும், லக்கினத்தையும் குறிப்பதாகும்.

பூமியைச் சுற்றியுள்ள ராசிச் சக்கரமானது; பூமி சுற்றும் போது ஒவ்வொரு கணமும், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி உதயமாகும். சோதிடத்தின்படி, அப்புள்ளியே குறிப்பிட்ட இடத்திற்கு அந்நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும்.  அந்த குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் ஜாதக-குறிப்பில் உதயமான அந்த ராசி இலக்கினமாக "/ல" என குறிக்கப்பட்டிருக்கும். இது அப்புள்ளி இருக்கும் இராசியில் அது சென்ற கோண அளவைக் குறிக்கும் பாகை, கலை, விகலை அளவுகளில் குறிப்பிடப்படுகின்றது.



நம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு கோளும் (நட்சத்திரங்களும், கிரகங்களும்) தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளன. அவற்றின் பிரமாணம், தட்ப-வெட்பநிலை, அதில் அடங்கியுள்ள தாதுப்பொருள்கள் என்பனவற்றின் அடிப்படையில் அவற்றின் கதிர்வீச்சுகள் வெளிப்படுகின்றன. சனிக் கோள் கருநீல நிறத்தையும், செவ்வாய்க் கோள் சிகப்பு நிறத்தையும் கொண்டிருப்பதுபோல் ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறமும், வெவ்வேறு நிறங்கொண்ட ஒளிக் கதிர்களும் உண்டு.

அத்துடன் ஒளிக் கதிர்களின் அலை (வீச்சின்) நீளங்களும், ஒளிச் சிதறல் (தெறிப்பு) தன்மைகளும் வேறுபட்டவை யாகும். ஜாதக-குறிப்பில் குறிக்கப்படும் ஒன்பது கோள்களும் தத்தமது ஒளிக் கதிர்களை வெளிப்படுத்திக் கொண்ட வண்ணம் உள்ளன. அவை அமைந்துள்ள இடத்திற்கேற்ப பிற கோள்களின் கதிர் வீச்சையும் பெறுகின்றன.

அதேபோல் உலகில் தோன்றி வாழும் உயிரினங்களின் உடலில் உள்ள தாதுப்பொருள்கள்; கிரகங்களில் இருந்து வரும் (நல்ல-தீய) கதிர்வீச்சை எந்த அளவு உட்கிரகிக்கின்றதோ அதற்கேற்ற வகையில் அவற்றிற்கு நன்மைகளும், தீமைகளும் ஏற்படுகின்றன என ஜோதிடம் கூறுகின்றது. அதனால்; நன்மை தரக்கூடிய கதிர்களை உட்கிரகிக்ககூடியதாக "அதிர்ஷ்டக் கற்களை"  பாவிக்கும்படி சோதிடர்கள் சிபார்சு செய்கின்றனர். அதன் பயனாக வாழ்க்கையில் அதிக நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பல்வேறு ஒளிக்கதிர்கள் ஒன்றையொன்று கலந்து திறன் குறைந்த கதிர்கள் அழியவும், திறன் மிகுந்த ஒளிக்கதிர் மேலோங்கவும் செய்யும். அன்றியும் இரு கதிர்களின் கூடுகையின் புதிய விளை கதிர்களும் உருவாகும். இவ்வாறு பிற கோள்களின் கதிர்களை அழிக்கும் கதிர் எந்தக் கோளிலிருந்து வருகின்றதோ அக்கோள் "உச்சம்" பெற்றதாக கணிக்கப்பெறுகின்றது. இதை "கிரக வலிமை" என்பார்கள்.

ஒவ்வொரு கோளும் தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளது போன்று வேறுபட்ட மின் தன்மையும், வேறுபட்ட காந்தப் புலமும் பெற்றுள்ளன. கோள்கள் ஒன்றையொன்று கடக்க நேர்கையில் இருவேறு காந்தப் புலக்கதிர் வெட்டினால் ஒத்த புலம் கொண்ட கோள்கள் விலக்கமடையும்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் "உயிர்க் காந்தம்" (ஜீவ காந்தம்) ஒன்றுண்டு. இந்த உயிர்க் காந்தம் மனிதன் ஜெனன மாகும் போது அவனுக்கு உருவாகின்றது. நாம் கருப்பையில் ஒளியைப் பெறவில்லை. கருப்பையினுள் சிசுவைச் சூழ்ந்துள்ள திரவம் பிற கதிவீச்சுகளில் இருந்து சிசுவை பாதுகாக்கின்றது. சிசு பிறக்கும் போது எந்தெந்தக் கோள்களின் கதிர் வீச்சுகள் எந்தெந்தப் பாகைகளிலிருந்து எவ்வளவு வலிமையுடன் சிசுவில் படுகின்றனவோ அவற்றின் தொகுபயனே நமக்கு உயிர்க் காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது.

வேறு விதமாக கூறுவதாயின் ஒருவருடைய பூர்வ-ஜன்ம புண்ணிய-பாபங்களை அனுசரித்து, அவைகளின் வினைப் பயன்களை அனுபவிக்க கூடியதான கிரகங்களின் நிலை ஏற்படும் பொழுது ஒரு சிசு பிறக்கின்றது. அப்பொழுது அதற்கேற்ற உயிர்க் காந்தப் புலம் சிசுவில் உருவாகின்றது. அந்த உயிக் காந்தப் புலத்தின் தன்மையை எடுத்துக் காட்டுவதெ எமது ஜாதகக்-குறிப்பு என்று கூறலாம்.

விளக்கமாக கூறுவதாயின்; ஒரு புகைப்பட கருவியில் (கமராவில்) படச்சுருளில் நொடிப் பொழுதிற்குள் பதியப்படும் முதல் ஒளி யின் வடிவமே அதில் பதியப்படுதல் போன்று; நாம் பிறந்த வேளையின் கோள்களின் அமைவிடமும்; அவற்றின் கதிரியக்கம், ஒளிச்சிதறல், ஒளிக்கசிவு போன்ற தன்மைகளுக் கேற்பவே நமது உயிர்நிலைக் காந்தமும் (படச் சுருள்-நெகரிவ் ஆக) அமைகிறது. ஒளிப்படத்தில் வெளிச்சம், படம் பிடிக்கப்படும் வேகம், ஒளி அளவு முதலியவற்றால் படம் மங்கலாகவோ தெளிவாகவோ அமைதல் போன்று நாம் பிறக்கும் காலத்தின் உருவாகும் உயிர்க் காந்தப் புலமும் கோள்களின் நிலைகளால் எமது வாழ்கை எப்படி அமையும் என படம் பிடித்துக் காட்டுகின்றது என கூறலாம்.

மேலும், வலிமையான காந்தப் புலத்தில் செலுத்தப்படும் மின் கதிர்கள் வெட்டப்பட்டு இயக்கம் நிகழுதல் போன்றே உயிர்க் காந்தப் புலத்திலும் அண்ட வெளிக் கதிர்கள் தமது தாக்கத்தினால் இயக்கங்களை நிகழ்த்துகின்றன. வேறுபட்ட இருவேறு காந்தப் புலத்தில் ஒரே அளவுள்ள கதிர் வேறுபட்ட இயக்கங்களைக் கொடுக்கும்.

அது போலவே, அண்ட வெளிக் கதிர் வீச்சு எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும் அவரவர் உடலில் அமைந்துள்ள மாறுபட்ட காந்தப் புல வேறுபாட்டால் வெவ்வேறான சிந்தனை, செயல், விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனை ஜாதக-குறிப்பின் அடிப்படையில் கணித்துக் கூறுவதே சோதிட சாஸ்திரமாகும்.

கிரகங்கள் எல்லாம் தத்தமக்கென வித்தியாசமான வேகத்தினைக் கொண்டுள்ளதால் சூரியனை சுற்றிவர வித்தியாசமான காலத்தை எடுக்கின்றன. இராசி மண்டல வலயத்தில் உள்ள 27 நட்சத்திரங்களையும் ஒரு முறை சுற்றிவர சந்திரன் சுமார் 29.53 நாட்களும்; புதன்-88 நாட்களும்; சுக்கிரன்-225 நாட்களும்; சூரியன்-365.25 நாட்களும் (அதாவது பூமி சூரியனை சுற்ற எடுக்கும் காலம்); செவ்வாய்-687 நாட்களும்; வியாழன் -11.86 வருடங்களும்; ராகு-18 வருடங்களும்; கேது-18 வருடங்களும்; சனி-29.46 வருடங்களும் எடுக்கின்றன.

"அசுவினி" நட்சத்திரம் இராசிச் சக்கரத்தின் முதல் இராசியான "மேடம்"திலும்,  "ரேவதி" நட்சத்திரம் கடைசி இராசி யான "மீனம்" திலும் அமைகின்றன. இதன்படி, ஒரு கோளின் நில-நிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன் குழுவில் அமைந்துள்ளது என்பதை கண்டறியலாம்.

இராசிகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதியாக இருக்கின்றது. சூரியனும், சந்திரனும் ஒவ்வொரு ராசிக்கு அதிபதி (உரிமைக்காரன்) ஆவார்கள். ஆனால் மற்றைய கிரகங்கள் 5ம் இரண்டு இரண்டு ராசிகளுக்கு அதிபதியாகின்றனர். ராகு கேதுக்களுக்கு சொந்த ராசிகள் இல்லை. அவர்கள் எந்தவீட்டில் நிற்கிறார்களோ அந்த ராசிக்கு அவர்கள் அதிபதியாகின்றனர்.

சூரியன் விண்மீன்:       சிம்ம-ராசிக்கு அதிபதியாவார்.
சந்திரன் கிரகம்:             கடகம்-ராசிக்கு அதிபதியாவார்.
செவ்வாய் கிரகம்:        மேஷம்-ராசிக்கும், விருட்சிகம்-ராசிக்கும் அதிபதியாவார்.
புதன் கிரகம்:                   மிதுனம்-ராசிக்கும், கன்னி-ராசிக்கும் அதிபதியாவார்.
குரு கிரகம்:                     மீனம்-ராசிக்கும்,  தனு-ராசிக்கும் அதிபதியாவார்.
சுக்கிரன் கிரகம்:            ரிஷபம்-ராசிக்கும், துலாம்-ராசிக்கும் அதிபதியாவார்.
சனி கிரகம்:                     மகரம்-ராசிக்கும், கும்பம்-ராசிக்கும் அதிபதியாவார்.

ஒருவருடைய ஜாதக-குறிப்பில்; அவர் பிறந்த நேரத்தில் எந்த எந்த கிரகங்கள் எந்த எந்த ராசிகளில் நின்றனவோ அதனை குறித்திருப்பார்கள். அவைகள் தங்கள் சொந்த ராசிகளில் இருந்து விலகி வேறு ராசிகளிலும், சில சமயங்களில் சொந்த ராசிகளிலும் இருக்கலாம். அவை சிசு பிறந்த நேரத்தின் கோசரநிலையாகும்.

ஆகவே; நாம் ஒருவருடைய ஜாதக குறிப்பைப் பார்த்து பலன் அறிய முற்படும் பொழுது கிரகங்களின் மூன்று நிலைகள் கவனிக்கப்படுகின்றன்.

முதலாவதாக அவற்றின் சொந்த (உரிய) இருப்பிடம்;
இரண்டாவதாக சிசு பிறக்கும் போது கிரகங்களின் (கோசர நிலை) இருப்பிடம் (ஜாதக குறிப்பில் உள்ளவை);
மூன்றாவதாக தற்போதைய இருப்பிடம் (தற்போதைய கோசர-நிலை) என்பனவாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படைக் கருவியாக விளங்குவது பஞ்சாங்கம். பஞ்சாங்கத்தில் கிரகங்கள், நட்சத்திரங்களின் அவ்வப்போதய நிலைகள், அசைவுகள், தங்கும் கால அளவுகள் யாவும் துல்லியமாக குறிக்கப்பட்டிருக்கும்.

கருத்துரையிடுக Disqus

 
Top