0

நியூட்டனின் காதல் விதிகளை இங்க போய் படிங்க

நியூட்டனின் விதிகளை தனக்குப் புரியும் படி தன் கல்லூரிக் காதலனிடம்
விளக்கம் கேட்டுச் சென்ற காதலி மீண்டும் தன் காதலனிடம் வருகிறாள்.
அவங்க பேசிறதை கொஞ்சம் கவனிப்போமா...


”வாங்க மேடம் நியூட்டனோட மூன்றாவது விதியக் கேட்டு பயந்து ஓடின ஆள  இப்பத்தான் பார்க்க முடியுது. என்ன பயத்தில காய்ச்சல் எதுவும்  வந்திருச்சா... இப்ப மட்டும் எப்படி தைரியம் வந்துச்சி என் கிட்ட வர்றதுக்கு.”


”பயமா ? யாருக்கு நாங்கள்லாம் யாரு தெரியும்ல பின்லேடன் பிளாக்லயே  பின்னூட்டம் போட்ட ஆளுங்க தெரியுமா ?”


”ஓ...நீங்க தானா அது அவ்ளோ தைரியமா அந்த அனானிமஸ் கமெண்ட் போட்டது,  உன்னோட ஐபி அட்ரஸ தான் தேடிக்கிட்டு இருகிறதா செய்தி வந்துச்சு, கண்டு  பிடிச்சா அஞ்சு கிலோ ஆர்டிஎக்ஸ் பார்சல்ல வரும். வாங்கி பத்திரமா வச்சுக்க  நம்ம கல்யாணத்தில பட்டாசுக்கு பதிலா ஆர்டிஎக்ஸ வெடிச்சுக்கலாம்.”


”யேய்...சும்மா இருப்பா நீ வேற...நான் கேக்க வந்ததையே மறந்துடுவேன் போல  இருக்கு. நீ தான் நல்ல பையனாச்சே நீ வரம்பு மீற மாட்டேன்னு தான் எனக்குத்  தெரியுமே. அதனால தானே உன்ன எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.”


”அம்மா தாயே ஐஸ் வச்சது போதும் ஏற்கனவே குளிர் தாங்க முடியல மொதல்ல  நீ வந்த விசயத்தச் சொல்லு.”


”அது ஒன்னு மில்ல கண்ணா இந்த ஐன்ஸ்டைனோட சார்பியல் கோட்பாட்ட  எனக்கு புரியுற மாதிரி அந்நிக்கு நியூட்டன் விதிகள சொன்ன மாதிரி கொஞ்சம்  சொல்லித்தயேன்.”


”கொஞ்சவா இல்ல சொல்லவா ?”


”விளையாடாதப்பா எக்ஸாம் நெருங்க நெருங்க பயமா இருக்கு.
 யார் யாரோ எதை எதையோ கண்டு பிடுச்சிட்டு போயிடுராங்க அதயெல்லாம்  நாம படிக்க வேண்டியிருக்கு ...ம்ம்ம்...”


”சரி சரி உன்னோட புலம்பல நிறுத்திட்டு விசயத்துக்கு வா.”


”அதான் சொன்னேன்ல ஐன்ஸ்டைனோட சார்பியல் கோட்பாட்ட எனக்குப் புரியுற  மாதிரி சொல்லித்தன்னு.”


”சரி.. இப்படி என் பக்கத்துல வந்து உட்காரு.”


”நோ...நோ...ஐயாவ பாத்தா ரொமான்ஸ் மூடுல இருக்குற மாதிரி தெரியுது. எதுக்கும் நான் கொஞ்சம் இடம் விட்டே இருக்குறேன். நீங்க பாடத்த ஆரம்பிங்க  சார்.”


”சரி கேட்டுக்க





 E = MC2 என்ற சமன்பாட்டில் (Theory of Relativity) மிகச் சிறிய துகள்களில் இருந்து  கூட பெரும் சக்தியைப் பெறலாம், அதேபோல மிகப் பெரிய சக்தியை சிறிய  துகள்களில் அடைக்கவும் முடியும். என்பதை E = MC2 என்ற சமன்பாட்டின் மூலம்  ஐன்ஸ்டின் விளங்கப்படுத்தினார்.

 இப்ப உனக்குப் புரியுற மாதிரி சொல்றேன்.

 உள்ளங்கை அளவுள்ள சிறிய இதயத்திலிருந்து தான் அளவிடமுடியாத  அளவுள்ள காதல் பிறக்குது. இதுவரை இது தான்னு யாரும் அளவு காண முடியாத  இந்தப் பிரபஞ்சம் முழுதும் பரந்து விரிந்துள்ள காதலை ஒரு சின்ன  மென்மையான மனசுக்குள்ள அடைச்சிட்றோமே. இதை உதாரணமாச்  சொல்லலாம்.”

”வாவ்...எப்படிப்பா உன்னால அறிவியலக்கூட காதலோட ஒப்பிட்டு சொல்ல  முடியுது.”

”ஏன் சொல்ல மாட்டே...பக்கத்துல வர்றதுக்கே யோசிக்கிற உன்ன மாதிரி  பொண்ணக் காதலிச்சா காதலயும் அறிவியல் மாதிரி புத்தகத்துல படிச்சு தான்  தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு. ஆனா, இந்த அறிவியல் இருக்கே காதலக் கூட  எதிர் பாலின ஈர்ப்பினால் ஏற்படும் ஒரு உணர்வுகளின் ரசாயன மாற்றம்னு தான்  சொல்லுது. சரி விசயத்துக்கு வர்றேன் கவனி.

 ஒளியின் வேகத்தில் பயணிக்கும் ஒருவரின் கடிகாரம் சாதாரணமாக இருக்கும்  ஒருவரின் கடிகாரத்தை விட மெதுவாகச் செல்லும் என்று தெரிவிக்கின்றன.  இதன் காரணமாக தூரமும் பாதிக்கப்படும் . ஒளியின் வேகத்துக்கு ஈடு  கொடுக்கும்  வகையில் ஒரு காரை ஒருவர் ஒட்டிச் சென்றால், அவர் செல்லும்  தூரம்  குறைவாக இருப்பதாக சாதாரணமாக இருப்பவருக்குப் படும். ஆனால் கார்  ஒட்டிச் செல்பவர் தூரம் அதிகமாக இருப்பதாகவே உணருவார். முரண்பாடுகள்  போல தோன்றினாலும் இதுதான் உண்மை.

 காதலன் தன் காதலிக்காவோ அல்லது காதலி தன் காதலனுக்காகவோ
 காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாகத் தெரியும்.
 அவர்கள் சேர்ந்திருக்கும் நேரம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அது  அவர்களுக்குப் போதாது அவையெல்லாம் காதலர்க்கு நொடிப் பொழுதாகவே  தோன்றும். இந்த விநோதமான காலத் தோற்றத்தை தான் ஐன்ஸ்டைன்  தன்னுடைய சார்பியால் தத்துவத்தில சொன்னாரு.

 ”காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷமென்பாய்…
  வந்துவிட்டால் வருஷங்கள் நிமிஷமென்பாய்…”

 அப்படின்னு நம்ம கவிஞர் வைரமுத்து இத தன்னோட கவிதைல அழகாச்  சொல்லியிருக்கிறாரு.”

”கவிஞர் வைரமுத்துவும் ஐன்ஸ்டைனோட சார்பியல் கோட்பாட்ட  படிச்சிருப்பாரோ ?”

”அத அவர் கிட்ட தான் கேக்கனும்...பாடத்த கவனி.

 மேலும்,

 E = MC2 என்ற சமன்பாடுதான் அழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதங்கள்  உருவாக்கப்படுவதற்கும் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

 எப்படின்னா

 இவ்வளவு பெரிய சக்தி வாய்ந்த காதலை தன்னுள் அடக்கி வச்சிருக்கிற மனசு  அந்தக் காதல் சூழ்நிலையின் சூழ்ச்சியால தோல்வியடைய நேர்ந்ததுன்னா  காதலர்கள் தங்களை அழிச்சிக்கவும் தயங்க மாட்டாங்க. லேசான வெட்டுக்க  காயாத்துக்கு கூட பயப்படுற வங்க காதல்ல தோல்வின்னதும் அவங்களுக்குள்ள  ஏற்படுகிற வெறுமை தற்கொலை செஞ்சுக்கிற அளவுக்கு அவங்களுக்கு  உத்வேகத்தக் கொடுக்கிறத உதாரணமாச் சொல்லலாம்.”

”என்னப்பா இப்படில்லாம் சொல்லி பயமுறுத்துறே ?”

”ஹேய்.... என்ன ஃபீல் பண்ணுறியா ?...ச்சும்மா ஒரு உதாரணத்துக்குத் தானே  சொன்னேன்.

 கடைசியா ஐன்ஸ்டைன் தன்னோட சார்பியல் தத்துவத்துல என்ன  சொல்றார்ன்னா

 சார்பியில் தத்துவம் காரணமாக மிக மிக மோசமான ஒரு ஆயுதம்  உருவாக்கப்பட்ட போதிலும், அத்தத்துவும் தான் நவீன இயற்பியலின்  துவக்கத்துக்கு அடித்தளமாக உள்ளது. அதுதான் நமது நவீன சமூதாய வாழ்வை  சாத்தியமடையச் செய்துள்ளது.

 அப்படின்னு சொன்னார்.

 என்ன தான் காதலர்கள் பலர் தங்கள் காதல் நிறை வேறாமல் உடல் அழித்து  உயிர் சேர்வோம் என்று உயிரை மாய்த்துக் கொண்டிருந்த போதிலும் இப்போதும்  காதலர்கள் காதலித்துக் கொண்டு தான் இருக்கிறாங்க. இன்றைக்கும் காதல் தான்  உலகத்த வாழவைத்துக் கொண்டிருக்கிறது அப்படின்னு கூட சொல்லலாம்.

 ஏன் நம்மாளோட காதலயும் கூட இதுல சேத்துக்கலாம்.

 என்ன புரிஞ்சுதா ஐன்ஸ்டைனின் காதல் சார்பியல்.”

”ம்ம்ம்.நல்லாவே புரிஞ்சுது”
”சரி........இப்போ எனக்கு குருதட்சணையா நீ என்ன தரப்போறே ?”

”குரு......தட்சணையா என்ன எதிர் பார்ப்பாருன்னு எங்களுக்குத் தெரியும்
 அதல்லாம் கொடுக்க வேண்டிய நேரத்துல தானா கொடுக்கப் படும் இப்ப நான்  கெளம்பறேன்... வர்ட்டா....கண்ணா.”

”வந்த வேளை முடிஞ்ச ஒடனே எஸ்க்கேப்பாய்டிவிங்களே...ம்ம்ம்...நமக்கு  இப்போதைக்கு கொடுத்துவச்சது அவ்வளவு தான் என்ன பண்றது...ம்ம்ம்.......”

கருத்துரையிடுக Disqus

 
Top