0
HNh8w0Z.jpg


மனிதனின் முக்கியமான புலன்களில் ஒன்று காது. தூக்கத்தின்போது கண், மூக்கு, வாய், சருமம் என நான்கு புலன்களும் ஓய்வில் ஆழ்ந்த பிறகு கடைசியாக தன்னுடைய செயல்பாட்டை நிறுத்துவது காது. அதேபோல், விழிக்கும்போது முதலில் செயல்படத்தொடங்கும் புலனும் காதுதான்.   

சத்தங்களை கேட்பதற்கு மட்டுமே நம்முடைய காதுகள் பயன்படுவது இல்லை. நாம் நிலையாக நிற்பதற்கும் கூட காதுதான் முக்கிய பங்காற்றுகிறது. காது வழியாக நாம் சத்தத்தை கேட்பதால்தான் பேச முடிகிறது. குழந்தைகளும் சத்தத்தை உணர்ந்துதான் பேசவே ஆரம்பிக்கின்றன. எனவே, கேட்கும் சக்தி மனிதனுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.



GNL3bNS.jpg?1



காது மண்டலம், வெளிக்காது (புறச்செவி), நடுக்காது (நடுச்செவி), உட்காது (உட்செவி) என்று மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சத்தம் எழுப்பும்போது, அது நம் வெளிக்காதின் வழியே ஊடுருவி காது ஜவ்வை அசைக்கிறது. இது நடுக்காதில் இருக்கும் மிகச்சிறிய எலும்புகளான ‘மெல்லன்ஸ், இன்கஸ், ஸ்டெப்ஸ்‘ என்கிற மூன்று எலும்புகளை அசைக்கும். அதில் ஸ்டெப்ஸ் எலும்பினால் அதிர்வு தரப்பட்டு உள் காதிலுள்ள திரவம் அசைகிறது. இதனால் செவி நரம்பு தூண்டப்பட்டு, அந்த ஓசை நம் மூளைக்குசென்று நமக்கு சத்தத்தை உணர வைக்கிறது.

எப்போதும் வெளிக்காது, உள்காது என இரண்டு பக்கமும் சரியான அழுத்தம் இல்லாமல் போனால், காது அடைப்பும் வலியும் ஏற்படும். விரல்களால் மூக்கை அழுத்தி பிடித்து, முடிந்த அளவுக்கு வாயை மூடி காற்றை முழுவதுமாக உள்ளிழுத்து, காது வழியாக வெளியேற்ற முயற்சிக்கலாம். இதனால், காதுக்குள் இருக்கும் ஜவ்வானது சமநிலையை அடைந்து அடைப்பு வலி குறையும்.  சிலர் சுத்தப்படுத்துவதாக கூறி அடிக்கடி ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றை காதில் விட்டு அழுக்கு எடுப்பது வழக்கம். காது ஒரு சென்சிடிவ் உறுப்பு. 

கம்பி போன்ற பொருட்களை உள்ளே செலுத்தும்போது, உள்ளே புண்ணாகி சீழ் பிடித்துவிடும். இந்த பழக்கத்தை உடனடியாக நிறுத்துவது காதுக்கு நல்லது. தவிர, காதில் அடிபடுதல் மற்றும் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும் காதில் சீழ்வடிதல் பிரச்னை ஏற்படலாம். சளி, பாக்டீரியா தொற்று, சுகாதாரமற்ற சூழ்நிலைகளால் கூட காதில் சீழ்வடிதல் பிரச்னையை ஏற்படுத்தும். இவ்வாறு பாதிக்கப்பட்டவருக்கு காய்ச்சல், சீழ் வடிவதால் நாற்றம், காதுகளில் வலி போன்ற அறிகுறிகள் தென்படலாம். இவ்வாறு வலி ஏற்பட்டால் ஆரம்ப நிலையிலேயே டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.




வலிக்கான காரணம்


பற்சொத்தை, கடைவாய்ப்பல் வெளிவராதிருத்தல், நாக்கு மற்றும் வாய்ப்புண்கள், டான்சில் சதை வளர்ச்சி, கழுத்தெலும்பு தேய்வு, புற்றுநோய் போன்ற நலிவுகள் மற்ற உறுப்புக்களை பாதிப்பதினால் காதில் வலி ஏற்படக்கூடும். தொண்டை அழற்சி காரணமாகவும், நோய்க்கிருமிகள் தாக்கத்தின் விளைவாகவும் காது வலி ஏற்படலாம். சுவாசிப்பதில் தவறான முறையில் மூச்சு வெளியேற்றுவதும் காது வலிக்கு ஒரு காரணமாக இருக்கலாம். மூச்சு உறுப்புகளில் தொற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் காதுவலி ஏற்படலாம். நீர்நிலைகளில் குதித்து குளிப்பதாலும், கடல் நீரில் குளிப்பதாலும் நோய் தொற்று ஏற்பட்டு நடுச்செவிக்குழல் மூலம் காதுக்குள் சென்று கடுமையான வலியை ஏற்படுத்தக்கூடும்.



பாதுகாப்பது எப்படி?


காதை குச்சி, பட்ஸ் மூலம் சுத்தம் பண்ணுதல் கூடாது. காதுகளில் வாக்மேன், ஹெட்போன் அணிந்தாலும் மிகக் குறைந்த அளவில் சத்தத்தை வைத்துக்கேட்க வேண்டும். அதிக சப்தம் இல்லாமல், மெல்லிய இசையை மட்டுமே கேட்க வேண்டும். சுற்று வட்டாரத்தில் அதிக இரைச்சல் இருப்பது தெரிந்தால், காதில் பஞ்சை வைத்துக்கொள்ளலாம். தொடர்ந்து செல்போனில் பேச நேரிட்டால் ஒரு காதிலிருந்து மறு காதுக்கு  போனை மாற்றி வைத்து பேசுவது நல்லது.
காதில் பூச்சி புகுந்துவிட்டால், சில துளி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விடலாம். உடனே பூச்சி செத்து வெளியே வந்துவிடும். காதில் அடிக்கடி டிராப்ஸ்களை போடக்கூடாது. இதனால் நோய் தொற்று, அரிப்பு ஏற்படலாம். காதிலுள்ள முடிகள் மிகவும் முக்கியமானவை, தூசியும், பூச்சியும் காதுக்குள் நுழையாமல் அவை தடுக்கின்றன. எனவே, இவற்றை வெட்டி எடுக்கக்கூடாது. மூக்கை சிந்துவதால் காதின் உள்ளே அழுத்தம் அதிகரிப்பதால் காது வலி அதிகமாகும். எனவே மூக்கை சிந்தும்போது அதை துடைப்பது நல்லது.



குழந்தைகளுக்கு



குழந்தைகளுக்கு காது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும், பாட்டிலில் பால் தருவதும் ஆகும்.



எளிய சிகிச்சை முறை
 

மாதுளம் பழத்தில் சாறு எடுத்து சூடாக்கி இளம்சூடாக சில துளிகள் காதில் விட வலி குறையும். மல்லிகை இலை எண்ணெயையும் 2 சொட்டு விடலாம். நல்லெண்ணைய்யில் ஒரு கிராம்பை போட்டு சூடு செய்து ஆற வைத்து அந்த எண்ணெய்யை காதில் விட்டால் வலி குறையலாம். முள்ளங்கி சாறோடு மருதாணி வேரை இடித்து அதன் சாற்றை காதில் விட்டு வர வலி குணமாகும். தாழம்பூவை நெருப்பு தணலில் காட்டி அதன் சாறை பிழிந்து காதில் விட வலி, இரைச்சல், காதில் தோன்றும் கட்டி குணமாகும். வாழைமர கிழங்கை இடித்து எடுத்து சாற்றை சிறிது சூடாக்கி துளிகளாக காதில் விடலாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top